செவ்வாய், 31 ஜூலை, 2012

களப்பிரர் என்னும் கலி அரசர்

Part 2

களப்பிரர், கன்னடர்கள் என்பதற்கு கூட முடிந்த முடிபான வரலாற்று சான்றுகள் எதுவும் இன்று வரை கிடைக்கவில்லை. ஆனால் ஒன்றை மட்டும் படு நிச்சயமாக சொல்லலாம் அது அவர்கள் மூவேந்தர்களையும் கலங்கடித்த புரட்சியாளர்கள். 325 ஆண்டுகள் தமிழகத்தின் மூவேந்தர்களையும் இருந்த இடம் தெரியாமல் ஆக்கிவிட்டார்கள். இவர்களுடைய ஆட்சியில் பார்ப்பனியம் அடங்கி ஒடங்கிபோனது. களப்பிரர் ஆட்சி செய்த 325 ஆண்டுகளும் தமிழகம் பார்ப்பனியத்திலிருந்து விடுபட்ட காலகட்டம்.

தங்களுக்கு தாங்களே உயர்வு கற்பித்துக்கொண்டு, அந்த கற்பிதத்தை வலிந்து திணிக்கும் விதமாக புராணங்களையும் இதிகாசங்களையும் எழுதிக்கொண்ட பார்ப்பனியம் கி.மு. 1700 – கி.மு. 1500-களில் தமிழகத்திற்குள் நுழைந்தது. தமிழுக்கும், தமிழ் சமூகத்துக்கும் கேடுகாலம் இந்த காலகட்டத்தில்தான் தொடங்கியது. தமிழகத்திலிருந்த மூவேந்தர்களும் ஏன், எப்படி எதற்கு என்று எந்த விதமான எதிர் கேள்வியும் இல்லாமல் பார்ப்பனியத்தின் ஆடம்பர ஆட்டங்களுக்கும், யாகங்களுக்கும் தங்களின் அறிவை தொலைத்தார்கள். மூவேந்தர்கள் தங்களோடு சேர்த்து தமிழ் சமூகத்தையும் அழிவிற்கு உள்ளாக்கினார்கள். தமிழர்களின் மதம், கலை, கலாச்சாரம், வானியல், சோதிடம், மருத்துவம், மொழி அனைத்தும் வெகு விரைவாக ஆரிய சமஸ்கிரத மயமாக்கப்பட்டன. ரிக் வேத ஆரிய முனிகள் தமிழர்களின் கண்டுபிடிப்புகளுக்கு உரிமை கொண்டாடினார்கள்.

தமிழ் கல்வி பிராமணர்களின் ஏகபோக உரிமையானது. இதற்கு உதாரணம், சங்க இலக்கியங்களுக்கு பிற்காலத்தில் உரை எழுதிய அனைவரும் பிராமணர்களே. திருகுறளுக்கு உரை எழுதிய பரிமேலழகரும் பிராமணரே. இதன் விளைவு சங்க இலக்கியங்கள் அனைத்திலும் திருகுறள் உட்பட எல்லாவற்றிலும் பார்ப்பனிய மேலாதிக்கத்தை திணிக்கும் வேலைகள் சுதந்திரமாக நடந்தது. இதைதான் ‘ஊரான் வுட்டு நெய்யே எந் பொண்டாட்டி கையே’ என்பார்கள். இதை தட்டி கேட்க வேண்டிய மூவேந்தர்களும் அசுவமேத யாகத்திலும், வாஜபேய யாகத்திலும், புத்திரகாமேஷ்டி யாகத்திலும் மூழ்கி கிடந்தார்கள். தங்களுக்கு எதிரான அனைத்தையும் விழுங்கி செரித்துவிடுவது பார்ப்பனியத்தின் சிறப்புகளுள் ஒன்று. வட இந்தியாவில் சமணமும், பௌத்தமும் பார்ப்பனியத்தால் விழுங்கப்பட்டன. இந்தியாவில் தோன்றிய பௌத்தம் இந்தியாவில் பரவாததற்கு காரணம் இதுவே.

மூவேந்தர்களும் போட்டி போட்டுகொண்டு வைதீக பார்ப்பனியத்தை ஆதரித்தார்கள். பிராமணர்களுக்கு பிரம்மதேயங்கள், சதுர்வேதி மங்களங்கள் வழங்கப்பட்டன. உள்ளூர் ஆட்சியதிகாரமும் பிராமணர்களுக்கு வழங்கப்பட்டது. மனு போன்ற பிராமணியத்தின் பிரத்தயேக தர்மங்கள் பொது மக்களிடையே திணிக்கப்பட்டன. உழைக்காமல் நோன்பு கும்மிடுவதற்கும், உழைப்பவர்ளை ஆதிக்கம் செய்வதற்கும் உண்டான அனைத்து வேலைகளையும் செய்ய பிராமணியம் தவறியது கிடையாது. இங்கே பிரம்மதேயங்கள், சதுர்வேதி மங்களங்கள் என்றால் என்ன என்று பார்க்கவேண்டி இருக்கிறது.

பிராமணர்களுக்கு என்று ஒரு ஊரை உருவாக்கி, அந்த ஊரில் வசிக்கப் போகும் ஒவ்வொரு பிராமணருக்கம் அந்த ஊரை சுற்றி விவசாய நிலங்களை ஏற்படுத்தி, அந்த நிலங்களில் உழைப்பதற்கு வேலையாட்களையும் கொடுப்பதற்கு பெயர் பிரம்மதேயம் மற்றும் சதுர்வேதி மங்களம். இந்த ஊர்களை சதுர்வேதி மங்களங்கள் என்றும் பிரம்மதேயங்கள் என்று அழைப்பார்கள். இந்த ஊர்களில் வசிக்கும் பிராமணர்களிடமிருந்து எந்தவிதமான வரியும் வசுலிக்கப்படாது. இவர்களின் விவசாய நிலங்களுக்கும் வரிகள் கிடையாது.

எந்த தகுதியின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மக்களுக்கு மட்டும் இத்தகைய ஆதிக்க சலுகைகள் என்று அன்றைய தமிழ் சமூகத்திற்கும், அன்றைய மூவேந்தர்களுக்கும் கேட்க வேண்டும் என்று தோன்றாத நிலையில்தான் களப்பிர புரட்சியாளர்கள் தமிழகத்திற்குள் நுழைந்தார்கள். ஒடுக்கப்பட்ட விவசாய மற்றும் வணிக வர்கத்தின் கூட்டே களப்பிரர்கள். சமூக சீரழிவிற்கு துணைபோன மூவேந்தர்களும் ஆட்சி அதிகாரங்களிலிருந்து விரட்டி அடிக்கப்பட்டார்கள். இந்த விரட்டியடிப்பு கி.பி. 150 ஆம் ஆண்டுகளிலேயே தொடங்கிவிட்டது. கி.பி. 250 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் களப்பிர புரட்சியாளர்களின் முறையான ஆட்சி தொடங்கியது. தமிழகமும் பார்ப்பனியத்தின் பிடியிலிருந்தது மெல்ல மெல்ல விலக ஆரம்பித்தது.

பார்ப்பனியத்தின் பக்கமும், பிராமணர்கள் பக்கமும் களப்பிர புரட்சியாளர்களின் பார்வை திரும்பியது. பிரம்மதேயங்களும் சதுர்வேதி மங்களங்களும் பிராமணர்களிடம் இருந்து பிடுங்கப்பட்டன. பிராமணர்கள் தலைமுறை தலைமுறையாக அனுபவித்த சொத்துகள் அனைத்தும் களப்பிர ஆட்சியாளர்களால் திரும்ப எடுத்தக்கொள்ளபட்டன. பிராமணர்களின் மேலாதிக்கம் அடக்கி ஒடுக்கப்பட்டது. பிராமணர்கள் உழைக்கும் வர்கத்திற்கு அடங்கி இருக்க வேண்டிய நிலையை களப்பிர புரட்சியாளர்கள் ஏற்படுத்தினார்கள். இந்தியாவில் தோன்றிய பேரரசுகளில் பார்ப்பனியத்திற்கு எதிரான வலுவான நடவடிக்கை எடுத்த ஒரே ஒரு பேரரசு களப்பிர பேரரசு மட்டுமே. பார்ப்பனியத்தை அடக்கி ஒடுக்கி ஒரத்தில் உட்கார வைத்த காரணத்திற்காகவே இன்று களப்பிரர் ஆட்சி இருண்ட காலமாக வருணிக்கப்படுகிறது. களப்பிரர் கொள்ளையர்கள் என்று அடையாளம் காட்டப்படுகிறார்கள். 

ஒரு நாகரிகத்தின் இருண்ட காலம் என்று வரையறுக்கப்படுவது எது என்று இந்த கட்டுரையின் தொடக்கத்திலேயே பார்த்தோம். ஆனால் நேர்மையான எந்த வரலாற்று ஆராய்ச்சியாளரும் களப்பிர ஆட்சி காலத்தை இருண்ட காலம் என்று சொல்லத் துணியக் கூட மாட்டார்கள். அனைவரும் அனைவருக்கும் சமம் என்று போதிக்கின்ற சமண மதமும், பௌத்த மதமும் களப்பிரர்களின் அரசாங்க மதமாக இருந்தது. களப்பிர புரட்சியாளர்களின் காலத்தில் காஞ்சிபுரமும், காவிரிபும்பட்டினமும் மிக மிக முக்கியமான பௌத்த நகரங்களாக இருந்தன. ஆரிய கலப்பற்ற மிகச் சிறந்த பௌத்த தமிழ் இலக்கியங்கள் களப்பிரர் ஆட்சி காலத்திலேயே எழுதப்பட்டன. சீவகசிந்தாமணி, நரிவிருத்தம், கிளிவிருத்தம், பெருங்கதை போன்ற இலக்கியங்கள் இதற்கு உதாரணம்.

சங்கமித்திரர், புத்ததத்தர், புத்தமித்திரர், போதிதருமர் (சினிமா புகழ்) போன்ற மிகச் சிறந்த பௌத்த மத துறவிகள் களப்பிர அரசர்களால் மதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் சங்கமித்திரர் இலங்கையில், பௌத்த தத்துவத்தின் ஒரு பிரிவான மகாயன பௌத்தத்தை பரப்பி புகழ் பெற்றவர். போதிதருமர் தென்கிழக்காசியாவில் பௌத்த தத்துவத்தின் தியான பிரிவான ஜென் தத்துவத்தை பரப்பி புகழ் பெற்றவர். இன்றைய வரலாற்று நூல்கள் சித்தரிப்பது போல் களப்பிரர் ஆட்சி காலம் இருண்ட காலமாக இருந்திருந்தால் இவர்களால் இத்தகைய சாதனைகளை செய்திருக்கவே முடியாது.

களப்பிரரை பற்றி முதன் முதலில் இந்த உலகிற்கு அறிவித்த வேள்விக்குடி செப்படு கூட கொற்கைகிழான் தற்கொற்றன் என்னும் பிராமணனுக்கு உரிமையாக கொடுக்கப்பட்ட வேள்விக்குடி என்னும் ஊரை பிடுங்கிகொண்ட கயவர்களாகவே களப்பிரரை அறிமுகப்படுத்துகின்றது. தன் பிறப்பை பெரிது படுத்தி உடல் உழைப்பு இல்லாமல், பிறரை ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று நினைப்பது மட்டும் கயமைத்தனம் கிடையாதோ!

உண்மை வரலாற்றை திரிப்பதும், மறைப்பதும் இந்திய வரலாற்று ஆராய்ச்சியாளர்களின் எழுதுகோல் தருமம். தாங்கள் எழுத புகும் வரலாற்று நிகழ்வுகளில் ஆரிய வர்ணம் தூக்கலாக இருக்கும்படி பார்த்துக்கொள்வது இவர்களின் தலையாய வரலாற்று கடமை. ஆரிய பார்ப்பனியத்திற்கு எதிரான அனைத்தையும் சிறுமைபடுத்துவதும், கேவலப்படுத்துவதும், எதிர்ப்பு குரல் எழுப்புபவர்களை துரோகிகளாக சித்தரிப்பதும் இவர்களுக்கு இப்பிறவின் புண்ணியத்தை தேடித்தரும் செயல்கள். இவர்களுக்கு மத்தியில் பாகுபாடு அற்ற உண்மை வரலாற்றை மீட்டெடுக்கும் நடுநிலையான வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் பலர் இருப்பது ஒன்றே உண்மை இன்றும் உயிருடன் இருக்கிறது என்பதற்கு அடையாளம்.

கி.பி. 250 முதல் தமிழகத்தை ஆரிய ஆதிக்கத்திலிருந்து மீட்டெடுத்த களப்பிரரின் ஆட்சி 325 வருடங்கள் கழித்து கி.பி. 575-ல் முடிவிற்கு வந்தது. தெற்கில் பாண்டியன் கடுங்கோனும், வடக்கில் பல்லவன் சிம்மவிஷ்ணுவும் களப்பிரரை வீழ்ச்சியடைய செய்தார்கள். ஆரிய பார்ப்பனியம் மீண்டும் ஆதிக்க சிம்மாசனம் ஏறியது ‘பழைய குருடிகள் கதவை திறந்தார்கள்’. பிடுங்கபட்ட பிராமண உரிமைகள் மீண்டும் அவர்களின் திறந்திருந்த வாயிக்குள் வந்து விழுந்தன. பிராமணர்களின் சலுகைகள் மீண்டும் அவர்களுக்கு கிடைத்ததும் தமிழகத்தின் இருண்ட காலம் முடிந்தது!

ஆதிக்க வர்கத்திற்கு எதிரான செயல்பாடுகள், எல்லாருக்கும் எல்லாம், தமிழ் இலக்கிய வளர்ச்சி, மத சார்பற்றத் தன்மை இவை போன்ற சிறப்பு அம்சங்கள் கொண்ட களப்பிரர் ஆட்சி இருண்ட காலமா அல்லது ஆதிக்க வர்கத்திற்க்கு எதிரான புரட்சி குரலா என்று தீர்மானிப்பது இந்த கட்டுரையை வாசிப்பவரின் கைகளிலேயே இருக்கிறது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக