ஞாயிறு, 16 ஜூன், 2013

இராச ராசா சோழன் காலம் பொற்காலாமா? பார்ப்பனர்களின் காலாமா ?

தமிழ்த்தேசியத்திற்கு முன்னோடி" "தமிழர்களின் பொற்காலம்" என்று வர்ணிக்கப்படுற இராஜராஜனைப் பற்றிய கல்வெட்டு ஆராய்ச்சி மற்றும் வரலாற்று அறிஞர்களின் நூல்களைப் பார்க்கும்பொழுது இராஜராஜசோழன் ஆட்சி தமிழர்களின் பொற்கால ஆட்சியாக இருக்கவில்லை பார்ப்பனர்களுக்கே அது பொற்காலமாக விளங்கியிருக்கிறது என்பது தெளிவாகிறது!
பார்ப்பனர்களை சேனாதிபதிகளாகவும், அவைத்தலைவர்களாகவும், அரியனையேற்றி அழகு பார்த்தவன் இராஜராஜன்! களப்பிரர்கள் காலத்தில் காயடிக்கப்பட்ட பார்ப்பன மேலாதிக்கம், மீண்டும் தலைவிரித்தாடியது இராஜராஜன் காலத்தில்!. வரலாற்று பெருமையாக சொல்லிகொண்டிருக்கும் தஞ்சைப்பெரிய கோவிலை எழுப்பும் பணியில் தான் புண்ணியம் தேடிக்கொள்வதற்காக இராஜராஜன் அப்பாவி மக்களை வாட்டி வதைத்திருக்கிறான்!.

வலங்கை-இடங்கை!

வலங்கை இடங்கை குல வேறுபாடு ராஜராஜன் காலத்தில் ஓங்கியிருந்தது. இந்த இரண்டு பிரிவுகளிலும் இம்பெறாத தங்களை மேன்மக்களாக கருதிகொண்டிருந்த பார்ப்பனக்கூட்டம் வலங்கைப் பிரிவினரை ஏவிவிட்டு இடங்கைப் பிரிவினருக்கு எதிராகதொடர்ந்து கலகம் விளைவித்தது. இந்தக் கொடுமையைத் தாங்க இயலாமல், இடங்கை சாதியினர் ஒன்றுகூடி கண்டனத் தீர்மானம் இயற்றியதோடு,அரசுக்கு எதிராக போர்கொடி தூக்கிய நிகழ்ச்சிகள் நித்த வினோத வளநாட்டுக் காந்தார நாட்டைச்சேர்ந்த இராசமகேந்திர சதுர்வேதி மங்கலம் கிராமத்தில் (நித்த வினோத வளநாடு என்பது தற்போதைய பாபநாசம் நன்னிலம் பகுதிகள்) நடைபெற்றுள்ளது.

பார்ப்பனர்களை எதிர்த்து கலகம் செய்பவர்களுக்கு இருபதினாயிரம் காசுகள் தண்டம் விதிக்கப்பட்டு கட்டத்தவறியவர்களின் நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.
சூழ்ச்சியில் ஆட்சி!

இராஜராஜன் சுந்தர சோழனின் இரண்டாவது மகன். தனது சித்தப்பா மதுராந்தக உத்தம சோழனின் துணைகொண்டு ஆட்சியில் இருந்த மூத்த சகோதரன் ஆதித்ய கரிகாலன் கதையை முடித்திருக்கிறான். அந்தப்பழி தன்மீது விழாமல் இருக்க உடனடியாக தான் ஆட்சிப் பொறுப்பை ஏற்காமல், தண்டிக்கப்படவேண்டிய உத்தமசோழன் அரியனை ஏற ஆதரவுக்கரம் நீட்டினான்

பிராமனர்களுக்கு மரணதண்டனை அளித்தால் அரசனுக்கு பிரம்மஹத்தி தோஷம் உண்டாகும் என்று சொல்லி ஆதித்ய கரிகாலன் கொலையில் உத்தம சோழனுக்கு உறுதுனையாக இருந்த பார்ப்பனர்களையும் தப்பவிட்டான்.

தான் அரியனை ஏறுவதற்கு ஒரு வகையில் காரணமாக இருந்த பார்ப்பனர்களுக்கு மிகுந்த விசுவாசத்தோடு இருந்திருக்கிறான் இராஜராஜன்!. பார்ப்பனர்களுக்கு பொற்கால வாழ்வளித்த சூத்திர இராஜராஜனை அவன் கட்டிய கோவிலுக்குள்ளேயே நுழைய அனுமதிக்காமல் வெளியேற்றியிருக்கிறது பார்ப்பனீயம்!. இன்றளவும் பார்ப்பன அடிவருடிகளாக விளங்கிக் கொண்டிருக்கும் தமிழினத் துரோகிகளுக்கு தஞ்சை பெரியகோவில் வெளியே நின்று காவல் காத்துக் கொண்டிருக்கும் இராஜராஜசோழன் சிலை ஒரு பாடமாக அமையட்டும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக