ஞாயிறு, 10 நவம்பர், 2013

புதுடெல்லி,: பேஸ்புக், ட்விட்டர், ஸ்கைப் போன்ற ஆன்லைன் சமாச்சாரங்களில் நீங்கள் வலம் வந்தால், கொஞ்சம் உஷாராக இருங்க. மத்திய அரசின் கழுகு கண்காணிப்பு அதிகரித்தபடி உள்ளது. அரசுக்கு, நாட்டுக்கு எதிராக, அவதூறு கிளப்பும் வில்லங்க கணக்குகளை நீக்க மத்திய அரசு தீவிரமாக இறங்கி உள்ளது. இதற்கு ஆப்பிள், பேஸ்புக், ட்விட்டர் போன்ற ஆன்லைன் நிறுவனங்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க ஆரம்பித்துள்ளன.  பேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் யார் வேண்டுமானாலும் ஆன்லைனில் பதிவு செய்து கணக்கை ஆரம்பிக்கலாம்.

 நண்பர்கள், உறவினர்களுடன் படங்கள் கருத்துக்களை பரிமாறிக்கொள்வதை தாண்டி, இப்போது ட்விட்டரை போல பொதுவான கருத்துக்கள் பேஸ்புக்கில் வலம் வருகின்றன.  அடையாளம் தெரியாத நபர்கள் பலரும் யாரை வேண்டுமானாலும் விமர்சிக்கலாம்; என்ன வேண்டுமானாலும் பதிவு செய்யலாம் என்ற நிலை இருப்பதாக பலரும் எண்ணினாலும், உண்மையில் சைபர் கிரைம் போலீசில் இருந்து மத்திய அரசின் உளவுத்துறை அமைப்புகள் வரை கண்காணித்தபடி உள்ளன. நாட்டுக்கு எதிராக, சமூகத்துக்கு எதிராக, வன்முறையை தூண்டுவதாக அமையும் விமர்சனங்களை அரசு ஏஜன்சிகள் கண்காணிக்கின்றன. அதுபோல, தனிப்பட்ட விமர்சனங்கள் கூட கண்காணிக்கப்படுகின்றன. 

அதனால் தான் சிலர் லைக் போட்டாலும் கூட சிக்கிக்கொள்கின்றனர். எப்போதாவது இப்படி சர்ச்சை கிளம்பி, சிலர் லைக் போட்டதற்காக கைதாவது, வழக்கை சந்திப்பது என்பது நடந்து தான் வருகிறது. இதன் பின்னணியில் அரசின் புலனாய்வு ஏஜன்சிகள் உள்ளன.  பல நாடுகளும் இப்படி கண்காணிப்பை செய்தாலும், இந்த விஷயத்தில் இந்தியா, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது, அதிக கண்காணிப்புள்ள நாடு என்ற பெயர் பெற்றுள்ளது. இது தொடர்பாக ஆப்பிள் நிறுவனம், மைக்ரோசாப்ட், பேஸ்புக், ட்விட்டர் நிறுவனங்கள் வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.

 
  இந்த அறிக்கைகளில் இருந்து கிடைத்த சில முக்கிய தகவல்கள்: 
* பேஸ்புக்கில் உள்ள அக்கவுன்ட்கள் தொடர்பாக 3200 வேண்டுகோள்கள் , இந்திய  அரசிடம் இருந்து வந்துள்ளது. அதில் 50 சதவீதத்துக்கு மேல்     பதில் அனுப்பப்பட்டுள்ளது. 
* பேஸ்புக்கில் எந்த ஒரு கணக்கையும் அரசு தடை செய்ய  சொல்லவில்லை. மாறாக, கண்காணிப்பை அதிகரித்துள்ளது. 
* மைக்ரோசாப்ட் அக்கவுன்ட்களில் 413 கணக்குகள் யாருடையது என்பதில் இருந்து தகவல்களை மத்திய அரசு கேட்டுள்ளது. 
* இதுபோல, ஸ்கைப் அக்கவுன்ட் வைத்திருப்பவர்கள் 102 பேர் பற்றிய தகவல்களை கேட்டு பெற்றுள்ளது. 
* ஆப்பிள் நிறுவனம், மத்திய அரசு கேட்டதில்,   41 சதவீத தகவல்களை கடந்த ஆறு மாதத்தில் அனுப்பியுள்ளது. 
* மொத்தம் 41 நாடுகள் இப்படி தகவல்களை கேட்டு பெற்று வருகின்றன. அவற்றில் முதலில் உள்ளது அமெரிக்கா;  இரண்டாவது இந்தியா. 
* அமெரிக்கா 8605 பேரின் பேஸ்புக் அக்கவுன்ட்கள் பற்றி தகவல் கேட்டுள்ளது. இவர்களை தொடர்ந்து கண்காணிக்கிறது. 
* இந்தியாவை பொறுத்தவரை, மத்திய கண்காணிப்பு மையத்தை ஆரம்பிக்க உள்ளது. அது முழு அளவில் இயங்க ஆரம்பித்தால், பேஸ்புக், ட்விட்டர்   அக்கவுன்ட்களை தன்னிச்சையாக கண்காணிக்கலாம். 
* பேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் இருந்து தகவல்களை பெற மட்டும் அவர்களிடம் தான் கேட்க வேண்டும். சுயமாக கண்காணிக்க அரசுக்கு இந்த   நிறுவனங்கள் அனுமதி தரவில்லை.
* கடந்த சில மாதங்களில் 60 ட்விட்டர் கணக்குகளை ரத்து செய்ய மத்திய, மாநில  அரசுகள் கேட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக